பெண்களைப் போற்றுவோம்... பெருமைமிக்க நாடாக மாற்றுவோம் - சீமான் மகளிர் தின வாழ்த்து

கோப்புப்படம்
இந்த ஒரு நாள் மட்டும் மகளிர் நாள் அல்ல ஒவ்வொரு நாளும் மகளிர் நாள் தான் என மனதில் கொள்வோம் என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
பெண்களைப் போற்றுவோம்.. பெருமைமிக்க நாடாக மாற்றுவோம். 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம். பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்' என்று பெண்களின் பேராண்மையைப் போற்றித் தொழுகிறார் பெரும்பாவலன் பாட்டன் பாரதி.
'பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே' என்று பெண்ணிய விடுதலைக்கு பெருமுழக்கம் எழுப்புகிறார் தாத்தா புரட்சிப்பாவலர் பாரதிதாசன்.
'மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் புரிந்திட வேண்டுமம்மா' என்று பெண்களைப் போற்றிக் கொண்டாடுகிறார் தாத்தா கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.
'பெண்ணினுள் ஆணும், ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ்சோதி' எனும் பாக்களின் வழியே பாலினச் சமத்துவத்தைப் போதிக்கிறார் நம்முடைய மூதாதை திருவருட்பிரகாச வள்ளலார் பெருமானார்.
'பெண் விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை' எனக்கூறி பெண்ணியத்தின் பெருந்தேவையைப் பேரறிவிப்பு செய்கிறார் தமிழ்த்தேசியத் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன்.
பெண்களைப் போற்றிக் கொண்டாடுவதே தமிழர்களின் அறம் வகுத்துத் தந்த உயர்நெறியென அதனை அடியொற்றினார்கள் தமிழின முன்னவர்கள். தாய்வழிச்சமூகமான தமிழ்ச்சமூகத்தில் ஆதிகாலந்தொட்டே பெண்களுக்கு முன்னுரிமையும், முதன்மைத்துவமும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது; தமிழ்ச்சமூகத்திற்கு பெண்களே தலைமை வகித்திருக்கிறார்கள்.
இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த அந்நியப் பண்பாட்டுப் படையெடுப்புகளால்தான் பெண்களுக்குரிய தலைமை திட்டமிட்டுப் பறிக்கப்பட்டு பெண்ணடிமைத்தனம் வேரூன்றியிருக்கிறது. அத்தகைய அடிமைத்தனத்திற்கும், உரிமைப் பறிப்புக்கும் எதிராகப் போராடி மெல்ல மெல்ல மேலெழுந்து வரும் பெண்களை அடக்கி ஒடுக்கும் விதமாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அண்மைக்காலத்தில் பல்கிப்பெருகி வருவது பெண்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பான வாழ்க்கை முறையினைக் கேள்விக்குறியாக்குவதாகவும் உள்ளது.
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக பள்ளிச்சிறுமிகள் முதல் கல்லூரி செல்லும் இளம்பெண்கள் வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சமூகப்பேரவலம் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் ஐந்திற்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டத் துயரமும், கடந்த ஒரு மாதத்தில் 26 பள்ளிக்குழந்தைகளுக்குப் பாலியல் வன்கொடுந்துயரங்கள் நிகழ்ந்தன எனும் இதயத்தை அறுக்கும் செய்தியும், மனச்சான்று உள்ள எவரும் ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.
தமிழ்நாட்டில் பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்க மாநில சமூக நலத்துறை, மாநில மகளிர் ஆணையம், மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றத் தடுப்பு பிரிவு, அனைத்து மகளிர் காவல்நிலையம் என பல்வேறு அமைப்புகள் இருந்தபோதிலும், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்க, குழந்தைகள் நலம் மற்றும் மாநில குழந்தைகள் நல ஆணையம், மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம், சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள், மாநில சட்ட குழுமம், பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி மையங்கள் என கணக்கிலடங்கா அரசு சார்ந்த, அரசு சாரா தன்னதிகார அமைப்புகள் மற்றும் சிறப்பு சட்டங்கள், சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தும் இன்றுவரை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை.
இக்கொடுமைகளுக்கு அடிப்படை காரணமாக அமைவது அரசு விற்கும் மதுவும், கட்டுங்கடங்கா கஞ்சா விற்பனையும்தான். திராவிட ஆட்சியில் நிலவும் கட்டற்ற போதைப்புழக்கத்தால் நாம் வாழும் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்பதால்தான் பெண்கள் மீதான வன்கொடுமைகள் பன்மடங்கு பெருகியுள்ளது. அண்மையில் சென்னை படூரில் இரண்டாம் ஆண்டு்படிக்கும் சக மாணவிகளுடன் மது அருந்திய கல்லூரி மாணவி உயிரிழந்த கொடுந்துயரம், மதுவினால் தமிழ்ச்சமூகம் எந்த அளவிற்கு முற்றுமுழுதாய் அழிந்துகொண்டிருக்கிறது என்பதற்கு தக்கச்சான்றாகும். தமிழ் இளம் தலைமுறையைச் சீரழிக்கும் மது போதையினை ஒழிப்பதன் மூலம் மட்டுமே பெண்களின் பாதுகாப்பான நல்வாழ்வினை உறுதிசெய்ய முடியும்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை முற்று முழுதாக களைந்திட, பெண்களை அரசியல் அதிகாரப்படுத்துவதே முதன்மை வாய்ப்பென்பதை உணர்ந்து, பாலினச்சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுத்தரவும் நாம் தமிழர் கட்சி சமரசமின்றி சமர் செய்யும் என உறுதியளிக்கிறேன்.
இந்த ஒரு நாள் மட்டும் மகளிர் நாள் அல்ல ஒவ்வொரு நாளும் மகளிர் நாள் தான் என மனதில் கொள்வோம். உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் நாள் நல்வாழ்த்துகள். பெண்களைப் போற்றுவோம். பெருமைமிக்க நாடாக மாற்றுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.