தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் இன்று குடமுழுக்கு விழா கோலாகலம் - திரளான பக்தர்கள் தரிசனம்


தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் இன்று குடமுழுக்கு விழா கோலாகலம் - திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 17 Nov 2024 8:02 PM IST (Updated: 17 Nov 2024 8:21 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் இன்று குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் இன்றைய தினம் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ராயபட்டியில் அமைந்துள்ள சக்தி விநாயகர் மற்றும் சின்ன மாரியம்மன் கோவிலில், தாரை தப்பட்டை முழுங்க கோபுர கலசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட புனித நீர், வேத மந்திரங்கள் முழங்க கோபுரத்தின் மீது ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

அதே போல், பழனி தண்டாயுதபாணி கோவிலின் உப கோவிலான வேணுகோபால சாமி கோவிலில், குடமுழுக்கு விழாவை தொடர்ந்து தீபாராதனை, நான்மறை ஓதுதல், நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானமும், தீர்த்த பிரசாதமும் வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா மேல் அரசம்பட்டு கிராமத்தில் புதிதாக எழுந்தருளியுள்ள காளியம்மன் கோவிலின் அஷ்டபந்தன மகா குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் பாளையம் பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி 'தென்னகத்தின் காசி' என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறை காவிரியில் புனித நீராடி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். இந்த குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story