புழல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார் கஸ்தூரி
நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி இருந்தது.
சென்னை,
கடந்த 3-ந்தேதி சென்னையில் பிராமண சமூகத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில், தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் மதுரை திருநகர் காவல்நிலையத்தில் நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு ஆஜராகக்கோரி கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பினர்.
இதனிடையே, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குண்டா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கியிருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மகளிர் சிறையில் அடைத்தனர். அவரை வரும் 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே, நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, நடிகை கஸ்தூரி தரப்பில், தனக்கு ஆட்டிசம் பாதித்த குழந்தை இருப்பதாகவும், அதனை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
கஸ்தூரியை ஜாமீனில் விடுவிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சென்னை புழல் சிறையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அப்போது சிறைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த கஸ்தூரி கூறியதாவது;
"என்னை நேசிக்கும் தமிழக அரசுக்கு நன்றி. அரசியல் வித்தியாசம் பாராமல் எனக்கு ஆதரவு தெரிவித்த தலைவர்கள், நண்பர்களுக்கு நன்றி. எனக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு நன்றி. தெலுங்கானா, ஆந்திரா மக்களுக்கும் மிகப்பெரிய நன்றி. சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி." இவ்வாறு அவர் பேசினார்.