கரூர் துயரம்: 19 நாட்களுக்கு பிறகு பனையூர் அலுவலகம் வந்த விஜய் - நிர்வாகிகளுடன் சந்திப்பு


கரூர் துயரம்: 19 நாட்களுக்கு பிறகு பனையூர் அலுவலகம் வந்த விஜய் - நிர்வாகிகளுடன் சந்திப்பு
x
தினத்தந்தி 16 Oct 2025 7:55 PM IST (Updated: 16 Oct 2025 8:00 PM IST)
t-max-icont-min-icon

கைது செய்யப்பட்ட மதியழகன் மற்றும் பவுன்ராஜ் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

சென்னை,

தவெக தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் தலைமறைவாகினர். இதில், மதியழகன் மட்டும் கைது செய்யப்பட்டார். மேலும், தலைமறைவான அவருக்கு அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக கரூர் தவெக நகரச் செயலாளர் பவுன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் நீதிமன்ற காவலில் கடந்த 14-ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட மதியழகன் மற்றும் பவுன்ராஜ் இருவரும் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இன்று ஜாமீனில் வெளியே வந்த கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜுக்கு திருச்சி மத்திய சிறை வாசலில் தவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து இருவரும் தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்திக்க சென்னை புறப்பட்டனர்.

இந்த நிலையில், கரூர் துயர சம்பவம் நடந்து 19 நாட்களுக்கு பிறகு பனையூர் தவெக அலுவலகத்திற்கு வந்துள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய். சிறையில் இருந்து வெளியே வந்த தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் விஜய்யை சந்தித்து பேசியுள்ளனர். தவெக நிர்வாகிகள் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்துள்ளனர்.

அப்போது நிர்வாகிகள் இருவரிடமும் சிறையில் இருந்தபோது நேரில் வந்து தன்னால் பார்க்கமுடியவில்லை என விஜய் வருத்தம் தெரிவித்ததாகவும், சிறையில் அவர்கள் எப்படி இருந்தார்கள், என்னென்ன நடந்தது என விஜய் கேட்டறிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் சம்பவத்திற்கு பிறகு பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு விஜய் முதல் முறையாக வந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story