கன்னியாகுமரி: ராட்சத அலையில் சிக்கி வடமாநில சுற்றுலா பயணி பலி
ராட்சத அலையில் சிக்கி வடமாநில சுற்றுலா பயணி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி,
பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் சூரியன் உதயம் மற்றும் அஸ்தமிக்கும் காட்சியை கண்டு களித்து செல்கின்றனர். இந்தநிலையில் நேற்று காலையில் வாவத்துறை கடற்கரையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அப்போது கடலில் ஒரு ஆண் பிணம் மிதந்தது. தகவல் அறிந்தது கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அதிநவீன ரோந்து படகு மூலம் கடலுக்குள் சென்று அலையில் மிதந்து கொண்டிருந்த ஆணின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கடலில் பிணமாக மிதந்தவர் இமாச்சலபிரதேசம் மாண்டி பகுதியைச் சேர்ந்த பிரின்ஜிலால் (வயது64) என்பதும், இவருடன் மொத்தம் 47 பேர் கொண்ட குழுவினர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளதும், இவர் அதிகாலையில் வாவத்துறை கடல் பகுதியில் இறங்கி குளிக்க முயன்றபோது ராட்சத அலையில் சிக்கி பலியானது தெரியவந்தது.