துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கருத்துக்கு...கனிமொழி எம்.பி பதிலடி!

ஒரு நிலத்தை கைப்பற்றுவதற்கு அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி என ஜெகதீப் தன்கர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
டெல்லியில் 98-வது அகில இந்திய மராத்திய இலக்கிய மாநாடு இன்று தொடங்குகிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இம்மாநாட்டின் பிரதிநிதிகளோடு நேற்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர்,
ஒரு நாடு அதன் கலாச்சாரம் மற்றும் அதன் கலாச்சார நெறிமுறைகளால் வரையறுக்கப்படுகிறது. உலகில் எந்த ஒரு நாடுடனும் நம்மை இதில் ஒப்பிட முடியாது. கலாச்சாரத்தில் இந்தியா தனித்துவமானது. நமது கலாச்சாரத்தையும், மொழிகளையும் வளர்ப்பது நமது வரையறுக்கப்பட்ட கடமை.
ஒரு மாநிலத்தை கைப்பற்றுவதற்கான சிறந்த வழி, அதை உடல் ரீதியாக முறியடிப்பது அல்ல. மாறாக அதன் கலாச்சாரத்தை பின்னுக்குத் தள்ளி, அதன் மொழியை அழிப்பதுமே சிறந்த வழி. இந்தியாவுக்குள் படையெடுத்தவர்கள் நம் மொழி, கலாச்சாரம், மத தலங்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டனர். அவர்கள் மிகக் கொடூரமானவர்கள். காட்டுமிராண்டித்தனமும் பழிவாங்கும் தன்மையும் உச்சத்தில் இருந்தது என்றார். ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் பேச்சை மேற்கோள் காட்டியுள்ள தி.மு.க எம்.பி கனிமொழி, "பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது" என்று குறிப்பிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.