அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் அரங்கில் இன்று ஜல்லிக்கட்டு


அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் அரங்கில் இன்று ஜல்லிக்கட்டு
x
தினத்தந்தி 15 March 2025 8:29 PM (Updated: 15 March 2025 9:51 PM)
t-max-icont-min-icon

அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் அரங்கில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடக்கிறது.

மதுரை,

தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் 14 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அதனை அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி காலை 7 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 1-ந் தேதி முதல் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் இன்று (16-ந் தேதி) அலங்காநல்லூர் கீழக்கரையில் அமைந்திருக்கும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதில் தி.மு.க.பகுதி, வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், கிளைக் கழகத்தினர், கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழகத்தினர், பொதுமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என திரளானோர் பங்கேற்க உள்ளார்கள்.

ஜல்லிக்கட்டை பொதுமக்கள் கட்டணமில்லாமல் மகிழ்ச்சியுடன் அமர்ந்து பார்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுரையில் இருந்து ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு சிறப்பு பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் அதனை தழுவி வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story