கச்சத்தீவு விவகாரத்தை நீர்த்து போக செய்தது அதிமுகதான் - அமைச்சர் ரகுபதி பேட்டி

கச்சத்தீவு விவகாரத்தை இலங்கையில் பிரதமர் மோடி பேசுவார் என்று நம்புகிறோம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை தலைமைச்செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மரியாதைக்குரிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்றைக்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், திமுகவின்ஆதரவில் மத்தியில் 16 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்கள் அப்பொழுது என்ன செய்தீர்கள்? என்று கேட்டார் எங்களைப் பொறுத்தவரைக்கும், அப்போதைக்கப்போது எதிர்ப்புக்குரல் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய இயக்கம்தான் திமுக. 1974-லிருந்து கச்சத்தீவு பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் எங்களை கலந்து ஆலோசிக்காமல் அதை செய்தது தவறு என்று சுட்டிக் காட்டி தமிழக மக்கள் ஒரு போதும் கச்சத்தீவை தாரை வார்ப்பது ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை தெளிவுபடுத்தி இருப்பவர் எங்களுடைய தலைவர் கலைஞர் அவர்கள் ஆவார்கள்.
இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும் என்று சொன்னால், இன்றைய நிலவரப்படி, வருவாய் துறையின் ஆவணங்களின்படி, கச்சத்தீவு என்பது இந்திய அரசின் மத்தியத்திற்க்கோ அல்லது தமிழக அரசுக்கோ சொந்தமானது அல்ல. ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தில் அது ராமநாதபுரம் ராஜாவுக்கு கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் அதை அனுபவித்து வந்தார்கள். மற்றவர்களுக்கு குத்தகைக்கு விட்டார்கள். அதைப்போல ஒரு மீனவர் அங்கே ஒரு அந்தோனியார் கோவிலைக் கட்டினார். அதற்கு அனுமதி தந்தார்கள். 1913-ல் சென்னை இராஜதானி ராமநாதபுரம் ராஜாவோடு தான் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதாவது ராமநாதபுரம் பகுதியை சுற்றி இருக்கக் கூடிய மீனவர்கள், மீன் பிடிப்பதற்கான வலைகளை உலர்த்திக் கொள்ளவும், அங்கு ஓய்வு எடுத்துக்கொள்ளவும், அனுமதியை ராமநாதபுரம் ஜமீன்தாரிடமிருந்து பெற்றது. இன்றைக்கு வருவாய்துறை கணக்குகளில் அதாவது மைல்கல் 1250, 255 ஏக்கர் நிலம் - ராமநாதபுரம் ஜமீனுக்குச் சொந்தமாக இருக்கின்றது. இப்படிப்பட்ட
சூழ்நிலையில், மத்திய அரசு அன்றைக்கு 1974 நாளில் கச்சத்தீவை கொடுத்தது, அன்றைக்கு அவர்களுக்கு சொந்தமில்லாத ஒன்றை கொடுத்திருக்கிறார்கள். 1976-ல் ஸ்ரீலங்கா-இந்தியா எல்லை உருவாக்கப்பட்ட போது, கச்சத் தீவு முழுவதும் இலங்கை பகுதிக்கு சென்று விட்டது. ஒன்றை மட்டும் இங்கே நான் சொல்ல விரும்புவது, 1960-ஆம் ஆண்டில் அன்றைக்கு பெருவாரி வழக்கு அதாவது மேற்கு வங்காளத்திற்கு சொந்தமான பெருவாரி வழக்கு, அதை அன்றைய பாகிஸ்தானிற்கு இந்திய மத்தியம் கொடுத்தது. அது எங்களை கலந்தாலோசிக்காமல் கொடுக்கப்பட்டது தவறு என்று மேற்கு வங்க அரசு அன்றைக்கு முதலில் குடியரசுத் தலைவரிடம் முறையிட்டு, அதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார்கள். சுப்ரீம் கோர்ட்டு அன்றைக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு தந்தது. அதாவது ஒரு மாநிலத்திற்கு சொந்தமான இடமோ, வேறு நாடுகளுக்கு கொடுப்பதாக இருந்தால், அந்த மாநிலத்தில் கலந்து அளிக்கவேண்டும். அடுத்ததாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதற்கான ஒப்புதல் பெற வேண்டும். என்கின்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தந்தது. ஆனால் கச்சத்தீவு விஷயத்தில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்தவிதமான ஒப்புதல் பெறப்பட்டதாக தெரியவில்லை. மாநில அரசை சட்டப்படி கலந்து ஆலோசித்ததாகவும் அங்கே இல்லை.
எதுவுமே தகவல்கள் இல்லாமல் உடனடியாக 1974, 28-ஆம் தேதி அன்று ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே அதை பத்திரிகையில் பார்த்து தெரிந்துகொண்டு, 1974, 29ம் தேதி ஜூன் மாதமே அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் அனைத்து கட்சி கூட்டத்தை அழைத்து நடத்தி, அதன் மூலமாக தங்களுடைய தமிழக மக்கள் ஒரு போதும் கச்சத்தீவை தாரை வார்ப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை தெளிவுப்படுத்தி இருக்கின்றார்கள். எனவே, இன்றைக்கு எங்களை சொல்கிற அதே அண்ணா திராவிட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், அவர்களுடைய ஆதரவிலும், மத்திய அரசு ஏறக்குறைய 16 ஆண்டுகள் இருந்திருக்கிறது. வாஜ்பாய் அரசில் ஓராண்டு – நரசிம்மராவ் ஆட்சியில் 5 ஆண்டு - அதற்கு பிறகு இன்றைய நம்முடைய பிரதமரின் ஆட்சியில் பத்தாண்டு காலம் என்று அவர்களும் ஏறக்குறைய 16 ஆண்டுகளுக்கு மேல் அவருடைய ஆதரவில் தான் மத்திய அரசு நடைபெற்றிருக்கிறது.
நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி மைனாரிட்டி அரசு தான். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவில்தான் நடைபெற்றது. அதேபோல வாஜ்பாய் அரசு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓராண்டு கால ஆதரவில்தான் நடைபெற்றது. தொடர்ந்து இந்த பத்தாண்டு காலத்தில் அவர்கள் இன்றைய பாரதிய ஜனதா அரசுக்கு அன்றைக்கு அதிமுக கழகம் முழு ஆதரவு கொடுத்தது. எனவே, 16 ஆண்டு காலம் நீங்கள் இருந்தீர்கள், நாங்கள் இருந்தோம் என்பது அல்ல. தமிழக மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினையை நாம் இன்றைக்கு கையில் எடுத்துக்கொண்டு அதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்பதற்காகத்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தார். உடனே சொல்கிறார்கள் - அடுத்த வருஷம் தேர்தல் வருகிறது - தேர்தலுக்காக நீங்கள் கொண்டு வந்திருக்கிறீர்கள் - தேர்தலுக்காக தீர்மானம் கொண்டு வருகிற கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல. நாங்கள் தேர்தலுக்கு என்று பயப்படுபவர்கள் அல்ல. ஏனென்று சொன்னால், 3, 4, 5, 6 தேதிகளில் நம்முடைய இந்திய பிரதமர் அவர்கள் தாய்லாந்து நாட்டிற்கும், இலங்கைக்கும் இன்றைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்கள்.
இலங்கையில் அவர்கள் பல்வேறு விஷயங்களை பேச இருக்கின்ற பொழுது, இந்த மீன்பிடி துறையும், மீனவர்கள் பிரச்சினையும் பேசப்பட இருக்கிறது. அப்படி பேசுகின்ற பொழுது மீனவர்களின் நலனைக் காப்பதற்காக கச்சத்தீவை மீட்கவேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தினால் அது பிரதமருக்கு உதவியாக இருக்கும். எனவே, பிரதமர் இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செல்கின்ற இந்த நேரத்தில், இந்த தீர்மானம் கொண்டுவருவது பொருத்தமாக இருக்கும் என்கின்ற காரணத்தினால் தான் முதல-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். இது தேர்தலுக்கான ஒன்று அல்ல -நாங்கள் மக்களை ஏமாற்றுகிறவர்கள் அல்ல. மக்களுடைய நம்பிக்கையைப் பெற்றிருக்கிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக்கழகம். தேர்தலுக்காக தீர்மானம் போடுகின்ற கட்சி அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி – இன்றைக்கு தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. பிரதமர் இலங்கைக்கு செல்வதற்கு முன்பாக நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறதா?
பதில் – இந்தத் தீர்மானம் அனுப்பப்படுகின்ற போது நிச்சயமாக பிரதமர் அவர்கள் இந்தத் தீர்மானத்தை பார்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏனென்று சொன்னால் பாரதிய ஜனதா கட்சி இந்த தீர்மானத்தை ஆதரிக்கின்ற காரணத்தினால், பிரதமர் நிச்சயமாக இதனை வலியுறுத்திப் பேசுவார் என்பதை நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்.
மேலும், சட்டத்துறை அமைச்சர் கூறியதாவது:-
15.8.1991 அன்று கோட்டையில் கொடியேற்றிய அன்றைய முதல்-அமைச்சர் அவர்கள் கொடி ஏற்றிவிட்டு பேசிய பொழுது, கச்சத்தீவை எக்காரணம் கொண்டும் விட்டுத்தர மாட்டோம். கச்சத்தீவை மீட்டே தீருவேன் என்று ஒரு சபதம் செய்தார். ஆனால், 20.4.1992 அன்று எட்டு மாதங்களுக்குப் பிறகு, தமிழக சட்டப்பேரவையில், அன்றைய முதல்-அமைச்சர் சொன்னது என்ன தெரியுமா? கச்சத்தீவை மீட்பது என்பது விரைவில் நடைபெறக்கூடிய ஒன்றாக தெரியவில்லை என்று மீட்பதற்கு முற்றுப்புள்ளி வைப்பதைப் போல பேசியவர் அன்றைய முதலமைச்சர். 1992-ல் தொடர்ந்து 30.9.1994-ல் தமிழக முதல-அமைச்சராக இருந்த அன்றைய முதல்-அமைச்சர் அவர்கள் அப்போது பிரதமராக இருந்த நரசிம்ம ராம் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், தீவு நாடான இலங்கைக்கு இந்த சின்னஞ்சிறிய கச்சத்தீவை இந்திய அரசு பிரித்துக் கொடுத்தது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நல்லுறவு நிலவிட வேண்டும் என்பதற்காகதான் என்று அப்போதைய முதல்-அமைச்சர், கச்சத்தீவை விட்டுக் கொடுத்ததை அன்றைக்கு நியாயப்படுத்தி குறிப்பிட்டது இன்றைக்கு இங்கு குறிப்பிட தகுந்த ஒன்று என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கச்சத்தீவு விவகாரத்தை நீர்த்து போக செய்தது அதிமுக தான். கச்சத்தீவு விவகாரத்தில் செல்வப்பெருந்தகை கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.