ஏகாதிபத்திய மனங்களை திருப்திப்படுத்த மும்மொழிக்கொள்கையா? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

அரசு பள்ளி மாணவர்கள் இந்தி கற்பதை தி.மு.க.திட்டமிட்டு தடுப்பதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது.
சென்னை,
மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2,400கோடி நிதியை அளிக்கும் என்று மத்திய மந்திரி கூறியிருந்தார். இவரது கருத்து தமிழ்நாடு அரசியல் களத்தில் பூதாகாரமாக வெடித்துள்ளது.மத்திய மந்திரியின் இந்த கருத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.தமிழ்நாடு பா.ஜ.க. மட்டும் மும்மொழி கொள்கை இந்தி திணிப்பு இல்லை என்றும் மாணவர்கள் விரும்பிய மொழியை கற்றுக் கொள்வது அவசியம் என்றும் தொடர்ச்சியாக கூறி வருகிறது. மேலும், தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழி பயிற்றுவிக்கப்படும் நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் இந்தி கற்பதை தி.மு.க. திட்டமிட்டு தடுப்பதாகவும் குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், மத்திய மந்திரியின் கருத்துக்கு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக கரண் தப்பார் மேற்கொண்ட நேர்காணலில் பேசிய அமைச்சர் பி.டி.ஆர். அவரது கேள்விகளுக்கு அதிரடி பதில் அளித்ததோடு, பதில் கேள்விகளையும் அடுக்கினார்.
இந்தநிலையில், மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் நேர்காணலை வரவேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
நமது அமைச்சரவை சகாவான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மும்மொழி கொள்கைகையில் தமிழக நிலைப்பாட்டை குறிப்பிடத்தக்க தெளிவுடன் வெளிப்படுத்தியுள்ளார். சில ஏகாதிபத்திய மனங்களை திருப்திப்படுத்த மும்மொழிக்கொள்கையை திணிப்பது ஏன்? இருமொழிக்கொள்கையால் தமிழ்நாடு கல்வியில் சிறந்துவிளங்கும்போது மும்மொழி எதற்கு? என பதிவிட்டுள்ளார்.






