சார்ஜாவில் இருந்து திருச்சி வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்


சார்ஜாவில் இருந்து திருச்சி வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
x
தினத்தந்தி 2 Nov 2024 7:49 PM IST (Updated: 3 Nov 2024 1:32 PM IST)
t-max-icont-min-icon

மறு ஆய்வுக்காக மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த நபருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் உடலில் சில கொப்பளங்கள் இருந்ததால், பரிசோதனைக்காக அவரது உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள மருத்துவ ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவுகளில், சம்பந்தப்பட்ட நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், அவருக்கு சின்னம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, மறு ஆய்வுக்காக மாதிரிகள் தற்போது புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாளைய தினம் முடிவுகள் தெரியவந்துவிடும்."

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


Next Story