ஆட்சியில் பங்கு என்பதை பற்றி இப்போது பேச முடியாது ; தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்

பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துவிட்டது. அந்த வகையில் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி தேர்தலை சந்திக்கிறது.
அதேவேளை, தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார். அவர் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நீண்ட இழுபறிக்குப்பின் கூட்டணி அமையவில்லை. ஏற்கனவே உள்துறை மந்திரி அமித்ஷாவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பேசியுள்ளனர். அன்றே செய்தியாளர்கள் சந்திப்பு வைத்து கூட்டணி குறித்து அறிவித்துவிட்டோம். ஆகையால், நீண்ட இழுபறிக்கு இங்கு இடமில்லை.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, துணை முதல்-மந்திரி பதவி என்பது குறித்த இப்போது பேசமுடியாது. தமிழகத்தில் தேசிய கூட்டணி அமையும். அதன் தலைவராக தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி செயல்படுவார். நெல்லையில் மீண்டும் போட்டியிடுவது குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும்.
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்குத்தான் மக்கள் வாக்களிக்கப்போகிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது' என்றார்.