செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டி மழை பெய்து வருகிறது.
இதனால் சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளுக்கு நீர்வரத்து மெல்ல அதிகரித்தது. இதையடுத்து ஏரிகளின் பாதுகாப்பை கருதி ஏரிகளுக்கு வரும் உபரிநீர் நேற்று குறைந்த அளவில் திறக்கப்பட்டது. மேலும் நீர்வரத்து அதிகமானால் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நீர்வரத்து அதிகரித்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 4,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 5 கண் மதகில் 2 மற்றும் 4வது ஷட்டர்களில் நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் திருமுடிவாக்கம், சிறுகளத்தூர், நந்தம்பாக்கம், திருநீர்மலை வழுதலம்பேடு உள்ளிட்ட இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி 23.29 அடியை எட்டியுள்ளது.
அதைபோலபூண்டி ஏரியில் வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரிக்கு 15,500 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 35 அடி உயரம் கொண்ட ஏரியின் நீர் மட்டம், 34.68 அடியை எட்டியுள்ளது. நீர் திறப்பு அதிகரிப்பால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.