தொடர் கனமழை: நாகையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு
நாகப்பட்டினத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தார்.
நாகப்பட்டினம்,
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையில் செம்பியன் மகாதேவி கிராமத்தில் முருகராசு என்பவரது கூரை வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முருகராசு அவரது மனைவி, மகன் மற்றும் மகள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே முருகராசுவின் 8-ம் வகுப்பு படிக்கும் மகன் கவியழகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்ற 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.