"நான் ஓடவும் இல்ல.. ஒளியவும் இல்ல.." - நடிகை கஸ்தூரி வெளியிட்ட பரபரப்பு வீடியோ
நான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை.. ஐதராபாத்தில் தனது வீட்டில் தான் இருந்தேன் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் கடந்த 3-ந் தேதி பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய உரை, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.
இருப்பினும், நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து கடந்த 14-ந் தேதி உத்தரவிட்டார்.
இவ்வாறு நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவானதாக தகவல் வெளியானது. அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் அவரை கைது செய்வதற்காக தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து நடிகை கஸ்தூரி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் இருப்பதாக சென்னை தனிப்படை போலீசாருக்கு நேற்று, தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று நடிகை கஸ்தூரியை கைது செய்தனர்.
இந்த நிலையில், ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை போலீசார் இன்று சென்னை அழைத்து வந்தனர். சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு பின் நடிகை கஸ்தூரிக்கு, வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி தான் தலைமறைவாக இல்லை என்றும், தனது ஒத்துழைப்புடனே போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றதாகவும் மூன்று வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோக்களை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பான அந்த வீடியோவில், "நான் தலைமறைவாகவும் இல்லை, எங்கும் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை. ஐதராபாத்தில் ஷூட்டிங்கிற்காக வந்திருந்தேன். ஐதராபாத்தில் என் வீட்டில் தான் இருந்தேன். ஷூட்டிங் முடித்துவந்தபிறகு நார்மலாக.. நானே ஒத்துழைப்பு கொடுத்து தான் என்னை கூட்டிவருகிறார்கள். எனக்கு மன அமைதி வேண்டும் என்பதற்காக என் போனை வழக்கறிஞரிடம் கொடுத்துவிட்டு சென்றேன்.
இன்று தான் போனை பார்த்தேன். மீடியாவில், 'தலைமறைவு.. பயந்து ஓடினார்' என்றெல்லாம் வந்திருக்கிறது. அது எதுவும் உண்மை கிடையாது. பயமெல்லாம் கிடையாது. இனியும் நான் முழு ஒத்துழைப்பு தருவேன். எழும்பூர் போலீஸ் இன்று என்னை விசாரணைக்கு அழைத்துச் செல்கின்றனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்; 'டாட்'" என்று தெரிவித்தார்.
தனது மற்றொரு வீடியோவில், "நேற்று ஷூட்டிங் முடித்துவந்தேன். அப்போது தான் போலீஸ் என்னை நெருங்கினார்கள். நான் ஐதராபாத் வீட்டில் தான் தங்கி இருந்து வேலை செய்துவருகிறேன் என்று பல முறை சொல்லி உள்ளேன். எனவே தலைமறைவு என்பதே கிடையாது. மன உளைச்சல் அதிகமாக இருந்ததால் போனை என்னிடம் இருந்து வழக்கறிஞர் வாங்கி வைத்துவிட்டார். தற்போது இரவல் போனில் இருந்து தான் இதனை பதிவு செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மூன்றாவது வீடியோவில், "என்னை எழும்பூர் போலீஸ் காவலில் எடுத்துள்ளது. நான் மறைந்து தலைமறைவாக இருந்தேன் என்பதற்கு மறுப்பு தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.