அரசாங்கமே எங்கள் மீது கருணை காட்டாவிட்டால் யார் காட்டுவார்கள்..? - மாற்றுத் திறனாளிகள் வேதனை

தமிழக அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல என்று மாற்றுத் திறனாளிகள் தெரிவித்தனர்.
சென்னை,
தங்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாதாந்திர உதவித்தொகையை ரூபாய் 1,500 ல் இருந்து 3,000 ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 17ஆம் தேதி மெரினாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தில் காத்திருப்பு போராட்டத்தை மாற்றுத்திறனாளிகள் தொடங்கினர். இந்நிலையில் இன்றும் 9 வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.
இதுதொடர்பாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், "தமிழக அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல, எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை ஏற்று, அரசு எங்கள் மீது கருணை காட்ட வேண்டும் என்ற நோக்கம் தான் எங்களுடையது, அதற்காகத்தான் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்" என்று கூறினர்.
இந்த போராட்டம் குறித்து பார்வையற்ற மாற்றுத்திறனாளி சோலைமலை கூறியதாவது:-
எனக்கு இப்போது வயது 32. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். பத்தாம் வகுப்பு வரை பார்வை நன்றாக இருந்தது. அதன் பிறகு சிறிது சிறிதாக குறைந்து, தற்போது 85 சதவீதப் பார்வையை இழந்து விட்டேன். கண் மருத்துவ உலகில் எனக்கு ஏற்பட்ட இந்தக் கொடிய நோயை RP என்று அழைக்கிறார்கள்.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பார்வை நரம்புகள் சிறிது சிறிதாக பாதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் முற்றிலுமாக பார்வை தெரியாது என்கிறார்கள் மருத்துவர்கள். முன்னோர் யாருக்காவது இருந்திருந்தால் மரபணு மூலமாக இந்த நோய் வரக்கூடும். நெருங்கிய சொந்தத்தில் திருமணம் நடந்தாலும் இந்நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்நோயை குணப்படுத்துவதற்கான சிகிச்சை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
நல்ல பார்வையுடன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய நான் பார்வையற்ற நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினேன். என் பெற்றோர் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். என்னுடைய தம்பி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். அரசு வேலை பெற வேண்டும் என்ற நோக்கில் பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோருக்கான தொழில்நுட்ப கல்வி மையத்தில் பைண்டிங் தொழில்நுட்பம் பயின்றேன்.
கடந்த 2016 வரை இங்கு படித்தவர்களுக்கு அரசு அச்சகம், பல்கலைக்கழகங்கள், அரசு நூலகங்கள் மற்றும் நீதிமன்றங்களில் வேலை கிடைத்தது. அந்த நம்பிக்கையில் நாங்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வந்தோம். கடந்த எட்டு வருடங்களாக மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.
கடந்தாண்டு ஜூலை மாதம் இதே இடத்தில் நாங்கள் போராடிய போது, அமைச்சர் கீதா ஜீவன் எங்களை சந்தித்து டிசம்பர் 3ஆம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினம் வருகிறது. நல்ல செய்திக்காக காத்திருங்கள் என்றார். அதை நம்பி அப்போது போராட்டத்தை முடித்துக் கொண்டோம்.
அரசிடம் இருந்து நல்ல பதில் வராததால் தற்போது தொடர்ந்து போராடி வருகிறோம். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் இங்கு போராடும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்க உள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வார்த்தையில் சொல்ல முடியாத சிரமங்களை, கஷ்டங்களை, துன்பங்களை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
எங்கள் வாழ்க்கை நிலையை புரிந்து கொள்ளாத சிலர் "தனியார் நிறுவனங்களிலும் நீங்கள் வேலைவாய்ப்புக்கு முயற்சி செய்யலாமே" என்கிறார்கள். தமிழக அரசுதான் எங்கள் அனைவருக்கும் தாய் மாதிரி. அதுவே எங்கள் மீது கருணை காட்டாவிட்டால் யார் காட்டுவார்கள்..?
இவ்வாறு அவர் வேதனையுடன் கூறினார்.