அரசு நிகழ்ச்சி மேடையில் எனக்கு வேலை இல்லை: அண்ணாமலை பேட்டி

தமிழக மக்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அண்ணாமலை கூறினார்.
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தவிர்த்துள்ளார். முதல்-அமைச்சர் பங்கேற்காதது வருத்தம்தான். அதற்கு முதல்-அமைச்சர் சொல்லியிருக்கக்கூடிய காரணம் ஏற்புடையது அல்ல. பிரதமர் வருவது அவருக்கு தெரியும்; பிப்ரவரி மாதத்தில் இருந்து பாம்பன் புதிய பாலம் திறப்பு தேதி குறிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரியும்.
ராமேசுவரத்தில் வெயில் அதிகம் என்பதால் ... முதல்-அமைச்சர் ஊட்டிக்கு சென்றுள்ளார். தொகுதி மறுசீரமைப்பை காரணம் காட்டி ஊட்டியில் இருக்க வேண்டிய அவசியம் என்ன?. பிரதமரை வரவேற்பது முதல்-அமைச்சரின் தலையாய கடமை. முதல்-அமைச்சர் தனது கடமையை செய்ய தவறிவிட்டார்; இதை பாஜக சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும் தமிழக மக்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ராமேசுவரம் நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சி; அதனால் மேடைக்கு பின்புறம் இருந்தேன். கோவிலில் இருய்ந்தேன்... பிரதமர் அவர்கள் அரசு நிகழ்ச்சி இல்லாமல் எங்கெல்லாம் இருந்தாரோ,.. அங்கெல்லாம் நான் இருந்தேன். அரசு நிகழ்வு; மக்கள் வரிப்பணத்தில் நடக்கின்ற நிகழ்வு அங்கே எனக்கு வேலை இல்லை. அதனால் தான் பாஜகவின் பிரதிநிதிகளான மத்திய இணை மந்திரி எல். முருகன், அந்த மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினர் இருந்தார், சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இருந்தார். அதில் நான் இருப்பது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.