"தமிழகத்தில் எத்தனை கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழை கற்பிக்கின்றன?" - அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி. கேள்வி


தமிழகத்தில் எத்தனை கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழை கற்பிக்கின்றன? - அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி. கேள்வி
x

பா.ஜ.க.வின் நிதி நெருக்கடி மற்றும் இந்தி திணிப்பு நிகழ்ச்சி நிரலை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க. எவ்வாறு தரவுகளை கையாளுகிறது என்பதை உலகம் அறியும். The Crooked Timber of New India: Essays on a Republic in Crisis என்ற புத்தகத்தில் இதை டாக்டர் பரகலா பிரபாகர் அம்பலப்படுத்தி இருக்கிறார்.

குறிப்பிட்ட புள்ளிவிவரங்களை தேர்ந்தெடுத்து மேற்கோள் காட்டி தனது பிரச்சாரத்துக்கு ஏற்றவாறு எண்களைத் திரித்து விளையாடக்கூடிய கட்சி பா.ஜ.க.. நீங்கள் உங்கள் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ள ASER தரவும் அப்படிப்பட்டதுதான். அது எப்படி உருவாக்கப்படுகிறது என்பது எங்களுக்குத் தெரியும். அதனால்தான் கல்விக் கொள்கைகளின் உண்மையான தாக்கம் குறித்து அறிந்து கொள்ள மாநில அரசு தனியாக கணக்கெடுப்பை நடத்துகிறது.

இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் போன்ற மைல்கல் திட்டங்கள் மூலம் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியதற்காக மத்திய அரசின் 2025 பொருளாதார ஆய்வறிக்கை கூட தமிழ்நாட்டைப் பாராட்டி இருக்கிறது. எழுத்தறிவில் சிரமப்படும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை போலல்லாமல், நாங்கள் எங்கள் மாணவர்களின் எதிர்காலத்தில் முதலீடு செய்கிறோம்.

நீங்கள் தமிழ்நாட்டின் மாணவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளதாக கூறுகிறீர்கள். அப்படியானால், உங்கள் அரசாங்கம் சமக்ர சிக்ஷா அபியான் (SSA) நிதியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடியை ஏன் நிறுத்தி வைத்துள்ளது..? உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருந்தால் எங்களுக்கு உபதேசம் செய்வதற்குப் பதிலாக இந்த நிதியை விடுவிக்க மத்திய அரசிடம் சொல்லுங்கள்.

சமமான கல்வியைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். ஆனால், கேந்திரிய வித்யாலயாக்கள் ஜெர்மன் மற்றும் பிற வெளிநாட்டு மொழிகளை நீக்கிவிட்டு, இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் தொடர்ந்து திணித்து, மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய உலகளாவிய பார்வையை தடுத்துள்ளது. இதன்மூலம், பா.ஜ.க. தனது பிளவுபடுத்தும் சித்தாந்த நிகழ்ச்சி நிரலை திணித்துள்ளது.

உண்மையிலேயே நீங்கள் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறீர்கள் என்றால், எத்தனை கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழைக் கற்பிக்கின்றன என்பது பற்றிய தரவை எங்களுக்குத் தர முடியுமா..? தமிழ்நாட்டில் உள்ள பல கேந்திரிய வித்யாலயாக்களில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா..? பா.ஜ.க.வின் தவறான தகவல், நிதி நெருக்கடி மற்றும் இந்தி திணிப்பு நிகழ்ச்சி நிரலை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story