பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்தது எப்படி? - விரிவான விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவு


பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்தது எப்படி? - விரிவான விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவு
x

4 பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்தது எப்படி? என்பது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கிருஷ்ணகிரியில் உள்ள 4 தனியார் பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் எனக்கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், "4 பள்ளிகளில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த 3 வழக்குகளிலும் இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு பள்ளிக்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற 3 பள்ளிகளுக்கும் சிறப்பு அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக ஒரு கோடியே 63 லட்சம் ரூபாய் கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட சிவராமன், பள்ளி மாணவிகளுக்கு அவரது அலுவலகத்தில் வைத்து பாலியல் தொல்லை அளித்ததாகவும், மாமல்லபுரம், கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதோடு, சம்பவம் நடைபெற்றது முதல் தற்போது வரையிலான விசாரணை நிலை குறித்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் எனவும், நீதிமன்றம் திருப்தி அடையக்கூடிய வகையில் விசாரணை நடைபெறும் எனவும் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

அதே சமயம் நீதிபதிகள், இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றம் திருப்தி அடையக்கூடிய வகையில் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை என்று குறிப்பிட்டனர். இதையடுத்து, 4 பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடத்தப்பட்டது எப்படி? என்பது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story