'இந்தி தேசிய மொழி அல்ல; அஸ்வின் கூறியது சரிதான்' - அண்ணாமலை
இந்தி தேசிய மொழி அல்ல என்று அஸ்வின் கூறியது சரிதான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த மாதம் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அஸ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பேசிய அஸ்வின், அங்கிருந்த மாணவர்களிடம் உங்களில் தமிழை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் யார்? என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் உற்சாகமாக சத்தம் எழுப்பி, தங்கள் தாய்மொழி தமிழ் என்பதை தெரிவித்தனர். தொடர்ந்து இந்தி மொழி மாணவர்கள் யாராவது இருக்கிறீர்களா? என்று அஸ்வின் கேட்டபோது அங்கு எந்த சத்தமும் கேட்கவில்லை.
இதற்கு அஸ்வின், "சத்தம் வரவில்லையே, இந்தி நமது தேசிய மொழி அல்ல, அதிகாரப்பூர்வ மொழி என்று சொல்லலாம் என்று நினைத்தேன்" என்றார். இதைக் கேட்டு மாணவர்கள் மீண்டும் ஆரவாரத்துடன் சத்தம் எழுப்பினர்.
இந்நிலையில், இந்தி நமது தேசிய மொழி இல்லை என்று அஸ்வின் கூறியது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-
"அஸ்வின் கூறியது சரிதான். நானும் அதையே சொல்கிறேன். இந்தி தேசிய மொழி அல்ல, அது ஒரு இணைப்பு மொழி, அது ஒரு வசதிக்கான மொழி. நான் எங்கும் இந்தி தேசிய மொழி என்று சொல்லவில்லை. வேறு யாரும் அவ்வாறு சொல்லவும் இல்லை."
இவ்வாறு அவர் கூறினார்.