எதிர்கால இந்தியாவை கட்டமைக்கும் இளைஞர்களை உருவாக்குவது உயர்கல்வித்துறை: அமைச்சர் கோவி.செழியன்


எதிர்கால இந்தியாவை கட்டமைக்கும் இளைஞர்களை உருவாக்குவது உயர்கல்வித்துறை: அமைச்சர் கோவி.செழியன்
x

உயர்கல்வியில் திறமைவாய்ந்த ஆசிரியர்களும், மாணவர்களும் உள்ளனர் என்று அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.

சென்னை,

சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாநில உர்யகல்வி மன்றம் சார்பில் நடைபெற்ற கல்விப்பட்டறை நிகழ்ச்சியை உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் இன்று தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் அமைச்சர் கோ.வி.செழியன் பேசியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு உயர்கல்வித்துறையில் பல்வேறு புதுமைகளை செய்து வருகின்றது. மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. எதிர்கால இந்தியாவை கட்டமைக்கும் வல்லமை படைத்த இளைஞர்களை உருவாக்குவது உயர்கல்வித்துறை.

இந்திய அளவில் உயர்கல்வி பெற்றவர்கள் 28 சதவீதம். 2030க்குள் 50 சதவீதத்தை எட்ட வேண்டும் என்பது இந்திய அரசின் எதிர்பார்ப்பு. ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சியில் திகழும் நமது தமிழ்நாட்டில் உயர்கல்வி பெற்றவர்கள் 47 சதவீதம் பேர். கல்வி கற்பதிலும், மாணவர்கள் கற்றுக்கொள்வதிலும் செயல்படுத்திவரும் திட்டத்தை மேம்படுத்துவதுதான் இந்த பயிலரங்கத்தின் நோக்கம்.

ஒவ்வொரு மாணவரும் அடையவேண்டிய திறன் என்ன என்பதை அறிஞர்கள் கணித்து, என்னென்ன உத்திகளை ஆசிரியர்கள் கையாண்டால் அந்த திறமைகளை மாணவர்களிடத்தில் உருவாக்க வேண்டும் என்பது குறித்தும், அதற்கான கற்றல் கற்பித்தல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை வரையறுப்பதும், மாணவர்களுக்கு முறையான திறன்மேம்பாடு சென்றடைகின்றதா என்பதை வகுப்பதுதான் இந்த பயிலரங்கின்நோக்கம்.

மாணவர்கள் பல்வேறு உயரங்களை அடைவதற்கான திட்டங்களை இந்த பயிலரங்கம் மூலம் வகுத்து, அவற்றை பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளுக்கும் கொண்டு சேர்த்து செயல்படுத்த வேண்டும். உயர்கல்வியில் திறமைவாய்ந்த ஆசிரியர்களும், மாணவர்களும் உள்ளனர். நல்ல திட்டங்களை வழங்க அரசும் தயாராக உள்ளது, அரசும், பேராசிரியர்களும் இணைந்து மாணவர்களுக்கு திறன்மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

முதலாவதாக மாணவர்களுக்கு தேவைப்படும் திறனறிவு கல்வி முறைகளை வகுக்க வேண்டும். இரண்டாவதாக அந்த திறனறிவுகள் மாணவர்களை சென்றடைய எந்த வகையான கற்பித்தல் முறை இருக்க வேண்டும் என்பதை வகுக்க வேண்டும். மூன்றாவதாக கற்றல் கற்பித்தல் நிகழ்ந்த பின்பு மாணவர்ளுக்கு கற்பித்தவைகள் சென்று சேர்ந்துள்ளதான என்பதை உறுதிசெய்ய தேர்வுநடத்தப்பட வேண்டும். நான்காவதாக கல்வி முறையில் மேலும் எவ்வாறு முன்னேற்றம் செய்யலாம் என்பது குறித்தும் கருத்துகளை பகிர்ந்துகொள்ள வேண்டும்.

இந்த நான்கு படிகளையும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை வரையறுக்க இந்த பயிலரங்கம் உதவிசெய்ய வேண்டும். இந்த கல்வி முறையால் மாணவர்கள் திறமையுடன், தன்னம்பிக்கையுடன் தொழில் முனைவோர்களாக உருவாக வாய்ப்புகள் அமையும். இதனால் சமூகத்தில் பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்படும். இதுபோன்ற பயிலரங்கங்கள் பல்கலைக்கழகங்களிலும், மண்டல அளவில், கல்லூரி அளவில் என கடைகோடி மாணவருக்கும் சென்று சேரும் வகையில் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story