கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?
கனமழை காரணமாக கடந்த இரு தினங்களாக பல மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை,
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வுப்பகுதியாக வலு இழந்து மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவி வந்தது. நேற்று லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலவி வந்த நிலையில், இது இன்று (14-12-2024) மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக மேலும் வலு குறைந்து அரபிக்கடல் பகுதிக்கு சென்றுவிடும் என்று தெரிவித்த வானிலை ஆய்வு மையம், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகும் என்றும், அதன் காரணமாக தமிழகத்தில் பருவமழை மேலும் தீவிரம் அடையும் என்றும் நேற்று தெரிவித்தது.
அதன்படி இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். அதனைத் தொடர்ந்து வரும் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும். இதன் காரணமாக 16-ந் தேதி (நாளை மறுநாள்), 17 மற்றும் 18-ந் தேதிகளில் டெல்டா, வட கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே கனமழை காரணமாக கடந்த இரு தினங்களாக பல மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கனமழை எதிரொலியாக தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* திருநெல்வேலி,
* தூத்துக்குடி,
* தென்காசி
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* தேனி
* விழுப்புரம்
* திருச்சி
* சிவகங்கை
இதனிடையே நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.