கனமழை எச்சரிக்கை: அலையாத்தி காட்டில் சுற்றுலா பயணிகள் படகில் பயணிக்க தடை
அலையாத்தி காடுகளுள் கடலோரங்களில் ஏற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திகாடு ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட அலையாத்திகாடுகளுள் ஒன்றாகும். சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து கடலோர கிராமங்களை பாதுகாக்கும் அரணாக அலையாத்திக்காடு உள்ளது. கடலோரங்களில் ஏற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது.
இந்த காடு காவிரி ஆற்றுப்படுகையின் தென்கோடியில் தஞ்சை மாவட்ட எல்லையான அதிராம்பட்டினம் தொடங்கி திருவாரூர் மாவட்டம் வழியாக நாகை மாவட்டத்தின் கோடியக்கரை வரை பரவி காணப்படுகிறது. இயற்கை எழில் மிக்க முத்துப்பேட்டை அலையாத்திகாட்டை ரசிக்க சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அலையாத்திகாட்டின் இடையே செல்லும் ஆற்றின் வழியே படகில் பயணிக்க சுற்றுலா பயணிகள் விரும்புகிறார்கள்.
இந்த நிலையில், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கனமழை பெய்து ஆறுகளில் தண்ணீர் அதிகமாக வர வாய்ப்புள்ளதால் மறுஅறிவிப்பு வரும் வரை அலையாத்திகாட்டில் சுற்றுலா பயணிகள் படகில் பயணிக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார்.