கனமழை எச்சரிக்கை : தென்காசி கலெக்டர் அறிவுறுத்தல்
தென்காசியில் டிசம்பர் 13-ம் தேதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
தென்காசி,
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று முதல் 14-ந்தேதி (சனிக்கிழமை) வரை வடகிழக்கு பருவமழையின் 4-வது சுற்று மழைப்பொழிவு தீவிரம் அடைய இருக்கிறது. இதில் இன்றும், நாளையும் தமிழகத்தில் பரவலாக அனேக இடங்களில் கன முதல் மிக கனமழையும், சில இடங்களில் அதி கனமழையும், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மிக கனமழை வரையிலும் பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் நாளை மறுநாள் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் டிசம்பர் 13-ம் தேதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியாக, பொதுமக்களுக்கு தென்காசி கலெக்டர் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். இதன்படி தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் ஆறு, குளங்களின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் மழை தொடர்பான பாதிப்பு ஏற்பட்டால் 1077, 04633-290548 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.