சென்னையில் கனமழை


சென்னையில் கனமழை
x

சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

சென்னை,

சென்னையில் நேற்று இரவில் கனமழை வெளுத்து வாங்கியது. கோயம்பேடு, அண்ணா நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, தியாகராயர் நகர் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. ஈக்காட்டுத்தாங்கலில் 15 நிமிடங்களாக கன மழை பெய்த நிலையில், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ.புரம், மைலாப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் பாரிமுனை, மின்ட், ராயபுரம், வண்ணாரப்பேடடை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட வடசென்னை பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பேருந்து நிறுத்தம் அருகே நடைபாதையில் உள்ள தடுப்புக்கம்பிகளில் மின்சார விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று மழைபெய்தபோது, தடுப்புக் கம்பியை தொட்ட ஒருவர், விளம்பர பலகையிலிருந்து அதில் பரவிய மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து உயிரிழந்தார். உயிரிழந்தது சேலத்தைச் சேர்ந்த 35 வயதான பிரகாஷ் என்பது தெரியவந்த நிலையில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை புறநகர்ப் பகுதிகளான பூவிருந்தவல்லி, மாங்காடு, குன்றத்தூர், நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், ஐயப்பன்தாங்கல், திருவேற்காடு, குமணன்சாவடி, போரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வாகனஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையிலும் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை சென்டிரல், எழும்பூர், ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ.புரம், மைலாப்பூர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு,கே.கே.நகர் விருகம்பாக்கம், தி.நகர் கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காலையில் வெயில் வாட்டி வதைத்தநிலையில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் மழை பெய்ததால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலும், சாலையோரங்களில் மழை நீர் தேங்கிய சம்பவங்களும் அரங்கேறின.

1 More update

Next Story