தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு மீண்டும் உடல்நலம் பாதிப்பு - பெற்றோர்கள் வாக்குவாதம்


தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு மீண்டும் உடல்நலம் பாதிப்பு - பெற்றோர்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 4 Nov 2024 11:42 AM IST (Updated: 4 Nov 2024 1:53 PM IST)
t-max-icont-min-icon

வாயு கசிந்த பள்ளியில் மீண்டும் மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருவொற்றியூர்,

சென்னை திருவொற்றியூர் கிராமத் தெருவில் விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1,200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி கட்டிடத்தின் 3-வது தளத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவிகள் படித்து வருகிறார்கள். அதே தளத்தில் ஆய்வுக்கூடமும் உள்ளது.

இந்தநிலையில் கடந்த 25-ம் தேதி ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் வகுப்பறையில் இருந்த மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. சில மாணவிகள் வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதனால் சக மாணவிகள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக பாதிக்கப்பட்ட 45 மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படும் பள்ளியில் உள்ள ஆய்வுக்கூடத்தில் தாசில்தார் சகாயராணி, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், திருவொற்றியூர் தீயணைப்பு துறையினர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆனால் ஆய்வுக்கூடத்தில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டுள்ளதை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அது எப்படி ஏற்பட்டது? என்பது குறித்தும் விசாரித்து வந்தனர். வாயுக்கசிவால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 10 நாட்களுக்கு பின் இன்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் 3 மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்ட 8 மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி முன்பாக கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மாநகராட்சி வடக்கு துணை ஆணையர், மாவட்ட கல்வி கண்காணிப்பாளர் பள்ளியில் நேரில் ஆய்வு நடத்தினர்.

தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக் கசிவு ஏற்பட்டதால் அந்த பள்ளிக்கு இன்று (நவ.04) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story