தோழர் சண்முகம் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சண்முகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த மாநில மாநாட்டில் அக்கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சண்முகத்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தமிழ்நாடு மாநில செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் தோழர் பெ.சண்முகம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயத் தோழர்களுக்காகவும் உழைத்த அவருக்கு கடந்த ஆண்டு அண்ணல் அம்பேத்கர் விருதை கழக அரசு வழங்கியது. அத்தகைய சிறப்புக்குரிய தோழர் சண்முகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கும், கழகக் கூட்டணியின் அனைத்து வெற்றிகளுக்கும் எந்நாளும் உழைத்த தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களின் பணிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விடைபெற்றிருந்தாலும் மக்கள் பணிக்கு விடைகொடுக்காமல் நாளும் உழைப்பவர் தோழர் பாலகிருஷ்ணன் என்பதை நாடறியும். இரு தோழர்களும் தங்கள் பணியைத் தொய்வின்றித் தொடர வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.