கவர்னரை திரும்பப் பெற வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை திருத்தவோ, மாற்றவோ கவர்னருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டில் செயல்படும் டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில், எதிர்ப்பையும் மீறி இந்தி விழாவைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளது மோடி அரசு. மற்ற தேசிய மொழிகளை புறக்கணித்து இந்தியை மட்டும் கொண்டாடுவது, நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் பங்கேற்றுள்ளார். அதில் ஒலிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரியை தவிர்த்துவிட்டு பாடியுள்ளனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை திருத்தவோ, மாற்றவோ கவர்னருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால் பல்வேறு மேடைகளில் தென்னக அரசியல் மீதான தனது வெறுப்பை வெளிப்படுத்தி வந்த கவர்னர் இப்போது இந்த அவமதிப்புக்கு வழிவகுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
கவர்னர் ஆர்.என்.ரவியை, பதவிக்காலம் கடந்தும் அதே பொறுப்பில் தொடர்ந்து வைத்துள்ளது மோடி ஆட்சி - ஆர்.எஸ்.எஸ் கொள்கையை இதன் மூலம் திணிக்கலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும். கவர்னர் ரவியின் போக்கை கண்டிப்பதுடன், அவரை திரும்பப்பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மீண்டும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.