47,013 ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக்கி அரசாணை வெளியீடு
![47,013 ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக்கி அரசாணை வெளியீடு 47,013 ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக்கி அரசாணை வெளியீடு](https://media.dailythanthi.com/h-upload/2025/01/27/36110741-dpi33.webp)
ஆசிரியர், ஆசிரியரல்லாத 47,013 பணியிடங்களை நிரந்தரமாக்கி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 47,013 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில்,
10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு வரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களை தொடர்ந்து நீட்டிப்பதன் அவசியம் குறித்து ஆராய குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது. அந்த குழுவின் கூட்டம் கடந்த ஆண்டு பிப்.9ம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் தற்காலிக பணியிடங்கள் அனைத்தும் நிரந்தர பணியிடங்களாக மாற்றலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பல்வேறு வகையான ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 47,013 எண்ணிக்கையிலான மொத்த தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றலாம்.
மேலும் தொழிற்கல்வி ஆசிரியர் மற்றும் பல்வேறு ஆசிரியர் அல்லாத மொத்தம் 5,418 எண்ணிக்கையிலான தற்காலிக பணியிடங்களை ஒழிவடையும் பணியிடங்களாக தற்காலிகமாக தொடரலாம். இப்பணியிடங்களில் இருப்பவர்கள் ஓய்வு பெறும் போது இந்த பணியிடங்கள் சரண் செய்யப்பட வேண்டும். ஆவண உதவியாளர், ஓட்டுநர் என ஆசிரியர் அல்லாத 145 எண்ணிக்கையிலான பணியிடங்களை தற்காலிகமாக தொடரலாம். இப்பணியிடங்களில் இருப்பவர்களுக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கலாம். 2 முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை புத்தாக்கம் செய்திடலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.