இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம்... தேனியில் பரபரப்பு

தேனியில் இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்ததாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி,
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு நேற்று 22 வயது இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் அங்கிருந்த போலீசாரிடம், தன்னை 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்கள் என்று கூறினார். அதைக்கேட்டு அங்கிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். பின்னர் அந்த பெண்ணை போலீசார் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர் திலகம், தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி ஆகியோர் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். விசாரணையில் அந்த பெண்ணுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருப்பதும், அவர் தனது கணவருடன் வசித்து வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து அந்த பெண்ணிடம் பாலியல் பலாத்கார சம்பவம் எப்படி நடந்தது? என்று போலீசார் விசாரித்தனர்.
அப்போது அந்த பெண், "நான் பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் நேற்று முன்தினம் நின்றுகொண்டிருந்தேன். அப்போது, ஏற்கனவே அறிமுகமான ஆட்டோ டிரைவர் ஒருவரும், மற்றொரு நபரும் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் என்னை வீட்டில் விட்டுவிடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்தனர். அதில் ஏறியதும் என்னை மிரட்டி அல்லிநகரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். அங்கு மேலும் 2 பேர் வந்தனர். பின்னர் 4 பேரும் என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர். அதன்பிறகு என்னை அங்கிருந்து வேறு இடத்தில் இறக்கி விட்டுச் சென்றுவிட்டனர்" என்று பரபரப்பான புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அந்த புகார் தொடர்பாக ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேரை போலீசார் தேடிச் சென்றனர். அவர்கள் 4 பேரையும் நேற்று மாலை போலீசார் பிடித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட வீட்டுக்கு போலீஸ் அதிகாரிகள் நேற்று இரவு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணை தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும், விசாரணையை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த சம்பவம் தேனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






