தீபாவளிக்கு பருப்பு, பாமாயில் கிடைக்குமா..? - விளக்கம் அளித்த அமைச்சர் சக்கரபாணி


தீபாவளிக்கு பருப்பு, பாமாயில் கிடைக்குமா..? - விளக்கம் அளித்த அமைச்சர் சக்கரபாணி
x

பருப்பு விநியோகம் தொடர்பான தனது அறிக்கையை படிக்காமல் வானதி அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டிருந்த அறிக்கையில், "தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சரிவர துவரம் பருப்பு வழங்கப்படுவதில்லை. மூன்று மாதங்கள் யாருக்கும் துவரம் பருப்பு கிடைக்கவில்லை.

கடந்த பல மாதங்களாக சில நாட்கள் மட்டுமே துவரம் பருப்பு கிடைக்கிறது. வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.200 வரை விற்கப்படுகிறது. இதனால் ரேஷனில் ரூ.30-க்கு கிடைக்கும் துவரம் பருப்பை நம்பியே ஏழை நடுத்தர மக்கள் உள்ளனர். தீபாவளிக்கு இன்னும் 14 நாட்களே இருக்கும் நிலையில் ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு ஆர்டர் செய்யப்பட்டதாகவும், அதில் 3 ஆயிரத்து 475 டன் மட்டுமே சப்ளை செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அரசின் அலட்சியத்தால் மீதமுள்ள 16,537 டன் துவரம் பருப்பு உரிய நேரத்தில் வந்து சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், தீபாவளிக்கு முன்பாக துவரம் பருப்பு பெற தகுதியான 1 கோடியே 60 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் துவரம் பருப்பு வழங்க முடியாது என்று கூறப்படுகிறது. இது ஏழை நடுத்தர மக்களை மிக கடுமையாகப் பாதிக்கும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பருப்பு விநியோகம் தொடர்பான தனது அறிக்கையை படிக்காமல் வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீபாவளிக்கு பருப்பும், பாமாயிலும் தங்கு தடையின்றி வழங்கப்படும். அக்டோபர் மாத துவரம் பருப்பு ஒதுக்கீடான 20 ஆயிரத்து 751 மெட்ரிக் டன்னில் நேற்று (அக்.15) வரை 9 ஆயிரத்து 461 மெட்ரிக் டன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.

2,04,08,000 பாமாயில் பாக்கெட்கள் ஒதுக்கீட்டில் 97,83,000 பாக்கெட்கள் வழங்கப்பட்டுவிட்டன. மீதி விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தீபாவளிக்கு எவ்விதத் தட்டுப்பாடுமின்றி துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்பட்டு வருகின்றன. பருப்பு விநியோகம் தொடர்பான எனது அறிக்கையை படிக்காமல் வானதி அறிக்கை வெளியிட்டுள்ளார்" என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.


Next Story