சென்னை மெரினாவில் உணவுத்திருவிழா: துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


சென்னை மெரினாவில் நடைபெறும் உணவுத் திருவிழாவை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

சென்னை,

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவுத் திருவிழா இன்று தொடங்கி வருகிற 24-ம் தேதி வரை சென்னை, மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளைக் கொண்ட 35 அரங்குகள் இந்த உணவுத்திருவிழாவில் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் இந்த உணவுத் திருவிழாவை தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் சுய உதவிக்குழுவினர் தயாரித்த தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த புகழ் வாய்ந்த உணவு வகைகளை அவர் ருசி பார்த்தார். மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் சேர்ந்து பிரமாண்டமான கேக் தயாரிப்பில் பல்வேறு மூலப்பொருட்களை கலக்கும் பணியில் அவர் ஈடுபட்டார்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் ஏற்பாட்டிலான 'உணவுத்திருவிழா'வை சென்னை மெரினா கடற்கரையில் இன்று தொடங்கி வைத்தோம்.

நம்முடைய மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளின் தயாரிப்பில் 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளைக் கொண்ட 35 அரங்குகள் இந்த உணவுத்திருவிழாவில் இடம்பெற்றுள்ளன. அரங்குகளைப் பார்வையிட்டு, உணவின் தரத்தை சாப்பிட்டுப் பார்த்து மகிழ்ந்தோம்.

இன்று தொடங்கி வரும் 24-ம் தேதி வரை, தினசரி மதியம் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ள இந்த சிறப்புக்குரிய உணவுத்திருவிழாவுக்கு சென்னைவாழ் மக்கள் தங்களுடைய பேராதாரவை தந்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம். மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளை தொழில்முனைவோராக்கிடும் வகையில் நடத்தப்படும் இந்த உணவுத்திருவிழா சிறக்கட்டும். அன்பும், வாழ்த்தும்!" என்று தெரிவித்துள்ளார்.


Next Story