செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
இன்று தொடங்கி ஜனவரி 18-ந்தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது.
சென்னை,
சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் 4-வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த மலர் கண்காட்சியை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். ஊட்டி தாவரவியல் பூங்கா போன்று அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவில் சுமார் 800 வகையான வித, விதமான செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. அரிய வகை மரங்களும் உள்ளன.
ஊட்டியில் நடக்கும் மலர் கண்காட்சிக்கு போக முடியாதவர்களுக்கு செம்மொழி பூங்காவில் நடைபெறும் இந்த மலர் கண்காட்சி வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த மலர் கண்காட்சியில் பெண்கள், குழந்தைகளை கவரும் வகையில் பறவைகள், செல்ல பிராணிகள் வடிவங்களில் அலங்கார வளைவுகள், செடிகளின் தோற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மலர் கண்காட்சிக்காக கோவை, ஊட்டி, கிருஷ்ணகிரி, ஓசூர், கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரையில் இருந்து அரிய வகை மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மலர் கண்காட்சியில் 50 வகையான மலர்கள், 30 லட்சம் மலர் தொட்டிகள் இடம்பெறுகின்றன. இன்று தொடங்கி ஜனவரி 18-ந்தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் மலர் கண்காட்சியை பார்வையிடலாம்.
மலர் கண்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு கட்டணமாக கடந்த ஆண்டை போலவே ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணமும், வீடியோ, போட்டோ கேமரா கொண்டு செல்பவர்களுக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.