சுருளி, கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு: நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக, நீர்வீழ்ச்சியில் குளிக்க 3-வது நாளாகத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேனி,
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடதமிழகம், தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை காணப்பட்டது.
இந்நிலையில் தேனி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்ததால் சுருளி மற்றும் கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ள சுருளி அருவி மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் உள்ளது. இந்த அருவிக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலத்தில் இருந்தும் பல்வேறு உள் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் வருகை தந்து அருவியில் குளித்து விட்டு செல்வது வழக்கம்.
இந்த சூழலில் தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதேபோல, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், அருவி பகுதிக்கு சென்று பார்க்கவும் 3-வது நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், கும்பக்கரை அருவியில் நீர் வரத்து குறைந்து சீராகும் வரை குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.