குற்றாலத்தில் வெள்ளம் - 2 பாலங்கள் உடைந்தன
இடைவிடாது பெய்த கனமழையால் நெல்லையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
நெல்லை,
வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. அதன்படி, நெல்லை மாவட்டத்தில் நேற்று அதிகாலை 5 மணியளவில் லேசான மழை பெய்ய தொடங்கியது.
காலை 7 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. பின்னர் பகல் முழுவதும் சாரல் மழை இடைவிடாது பெய்தவாறு இருந்தது. மாலையில் அவ்வப்போது கனமழை கொட்டியது. இரவு வரையிலும் இந்த மழை நீடித்தது.
இடைவிடாது பெய்த கனமழையால் நெல்லை மாநகரில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம்போன்று தண்ணீர் தேங்கியது. ஏற்கனவே சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கியதால் மேலும் பெரிதானது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதேபோல் நெல்லை புறநகர் மாவட்டத்தில் அம்பை, நாங்குநேரி, களக்காடு, சேரன்மாதேவி, மானூர், வள்ளியூர், திசையன்விளை, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலான மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதலே மிதமான மழை பெய்தது. தொடர்ந்து பகலிலும் பரவலான மழை விட்டு விட்டு பெய்தது. காலையில் மாணவ-மாணவிகள் மழையில் குடைபிடித்தும், மழைக்கோட் அணிந்தும் பள்ளிக்கு சென்றனர். மதியத்துக்கு பிறகு பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. மதியத்துக்கு பிறகு நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகளும் மாற்று தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
தொடர் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்தது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. முன்னெச்சரிக்கையாக அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அருவிக்கரைகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்தனர்.
ஆலங்குளம், கடையம், சிவகிரி, கடையநல்லூர், சங்கரன்கோவில், திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இடைவிடாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில், தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 2 பாலங்கள் உடைந்தன. அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கோவிலை தாண்டி உள்ள கடைகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளம் மிக மோசமாக இருக்கும் நிலையில் அங்கு யாரும் சென்றுவிடமால் இருக்க போலீசாரும், மாவட்ட நிர்வாகும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக நேற்று அங்கு 40 செ.மீக்கு மேல் மழை பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.