கொடிக்கம்ப விவகாரம்: வி.சி.க. நிர்வாகிகள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு


கொடிக்கம்ப விவகாரம்: வி.சி.க. நிர்வாகிகள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
x
தினத்தந்தி 11 Dec 2024 2:21 PM IST (Updated: 11 Dec 2024 2:44 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் வி.சி.க. கொடிக்கம்ப விவகாரத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை மாவட்டம், சத்திரபட்டி அருகிலுள்ள வெளிச்சநத்தம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சுமார் 45 அடி கொடி மரம் நடப்பட்டு, அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கொடியை ஏற்றி வைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என கூறி வருவாய்த் துறையினர் ஆட்சேபம் தெரிவித்தனர். இது தொடர்பாக கடந்த 6-ம் தேதி இரவு வருவாய்த் துறையினர், வி.சி.க.வினர் இடையே தகராறு ஏற்பட்டது.

வி.சி.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதன்பின், வருவாய்துறையினர் , காவல் துறையினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து சுமார் 45 அடி கொடி மரத்தில் வி.சி.க. கட்சி கொடி ஏற்ற வருவாய்த்துறையினர் அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி, டிச 7-ம் தேதி கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

இதற்கிடையில் வருவாய்த் துறையினரை தாக்கியவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும், வருவாய்த் துறையினர் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடவேண்டும் என்பதை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 45 அடி கொடிமரம் நடுவதை தடுக்க தவறியதாகவும், கம்பத்தில் கூடுதல் அடி உயரத்திற்கு அனுமதி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு முறையாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என காரணம் காட்டியும் மதுரை சத்திரபட்டி உட்வட்ட வருவாய் அலுவலர் அனிதா, வெளிச்சநத்தம் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) பரமசிவம், காவனூர், வெளிச்சநத்தம் கிராம நிர்வாக உதவியாளர் பழனியாண்டி ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து முறையே கோட்டாட்சியர் சாலினி, வருவாய் அலுவலர் சக்திவேல், தாசில்தார் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் மதுரையில் கொடிக்கம்ப விவகாரம் தொடர்பாக விசாரிக்க சென்ற துணை வட்டாட்சியர்உள்ளிட்ட அதிகாரிகளை தாக்கியதாக வி.சி.க.-வினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வி.ஏ.ஓ. பரமசிவம் அளித்த புகாரின்பேரில் சத்திரப்பட்டி காவல்நிலையத்தில் 5 வி.சி.க. நிர்வாகிகள் உள்பட 21 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story