மீனவர்கள் விவகாரம்: தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? - சீமான் கேள்வி


மீனவர்கள் விவகாரம்: தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? - சீமான் கேள்வி
x

கோப்புப்படம்

கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பிற்கான நிலையான தீர்வாக அமையும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகவிடம், இலங்கை ராணுவத்தால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமென பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வலியுறுத்தி உள்ள போதும், அவர்களில் யாருமே தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை மீட்பது குறித்து வாய் திறவாதது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

கச்சத்தீவை மீட்காமல் எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தினாலும், என்ன தீர்வை எட்டினாலும், அவை ஒருபோதும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நிலைத்த பயனோ, பாதுகாப்போ தரப்போவதில்லை.

தமிழின முன்னோர்களான ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்ட 285 ஏக்கர் கச்சத்தீவானது வரலாறு அடிப்படையிலும், வாழ்வியல் அடிப்படையிலும் முழுக்க முழுக்க தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலப்பகுதியாகும். கடந்த 1974 -ம் ஆண்டு அம்மையார் இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் இந்தியா – இலங்கை இடையே ஏற்பட்ட சட்டவிரோத ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்ட எந்த ஒரு நிலப்பகுதியையும் பிற நாட்டிற்கு வழங்க மத்திய அரசு விரும்பினால் இந்திய நாடாளுமன்றத்திடமும், தொடர்புடைய மாநில அரசிடமும் ஒப்புதல் பெற வேண்டுமென இந்திய அரசமைப்பு விதி வரையறுக்கிறது.

ஆனால், அவற்றில் எந்த விதியையும் பின்பற்றாமல் சட்டத்திற்குப் புறம்பாக அம்மையார் இந்திராகாந்தி தன்னிச்சையாகத் தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தார். அன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்ட கருணாநிதி தலைமையிலான அன்றைய தி.மு.க. அரசு அதனைத் தடுத்து நிறுத்தாது, கைகட்டி வேடிக்கைபார்த்து பச்சைத்துரோகம் புரிந்தது. இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததற்குப் பிறகுதான் இலங்கை கடற்படையால் தமிழர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் கொடுமைகள் தொடங்கின.

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சிங்கள இனவெறி ராணுவம் சிறைபிடிப்பது, கொலைவெறித் தாக்குதல் நடத்துவது, படகுகள், மீன்களைப் பறித்துக்கொள்வது, உடைமைகளை அபகரித்துக்கொள்வது, வலைகள், படகுகளைச் சேதப்படுத்துவது, துப்பாக்கிச்சூடு நடத்தி உயிர் பறிப்பது என அரங்கேற்றிய கொடுமைகள் சொல்லி மாளக்கூடியதல்ல. தமிழ்நாட்டில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும், தற்போதைய தி.மு.க. ஆட்சிக்காலத்திலும், அதேபோன்று இந்திய ஒன்றியத்தை காங்கிரசு ஆண்டபோதும், அதன் பிறகான பா.ஜ.க. ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்துவரும் தமிழக மீனவர்கள் தாக்குதல்களை நிறுத்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் எவரும் அணுவளவும் முயன்றதில்லை.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதிகார மாற்றம் எத்தனை முறை நிகழ்ந்தாலும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் மட்டும் தொடர்கதையாகவே உள்ளது. அதற்கு எவ்வித எதிர்வினையுமாற்றாது ஒப்புக்கு கடிதம் எழுதிவிட்டு, கடமை முடிந்ததாய் ஆட்சியாளர்கள், கடந்துபோவதுதான் இன்றுவரை தமிழ்நாட்டு மீனவர்கள் கண்ணீர் கடலில் தத்தளிக்கும் கொடுந்துயர்மிகு வரலாறாகும்.

எண்ணூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் நடுக்கடலில் படுகொலை செய்யப்பட்ட போதிலும், மீனவர்களின் கோடிக்கணக்கான சொத்துகள் சூறையாடப்பட்ட போதிலும் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் அதனைத் துளியும் பொருட்படுத்துவதில்லை; உலகில் எந்த ஒரு நாடும் தனது நாட்டுக் குடிகள், அந்நிய நாட்டு இராணுவத்தால் தாக்கப்படுவதை இப்படி சகித்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிராது.

இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் உலகின் நான்காவது மிகப்பெரிய ராணுவத்தை வைத்துள்ள இந்திய அரசு, இலங்கை அரசுக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்காது அமைதி காப்பதும், தமிழ்நாட்டு வரிப்பணத்தில் பல்லாயிரம் கோடிகளை அள்ளிக்கொடுத்து நட்பு பாராட்டுவதும் தமிழர்களுக்கு இழைத்திடும் பச்சைத்துரோகமாகும்.

குஜராத் மாநில மீனவர் பாகிஸ்தான் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டபோது பதறி துடித்த பா.ஜ.க. அரசு, உடனடியாக அவர்கள் மீது கொலை வழக்கு பதிந்து, பன்னாட்டு பிரச்சனையாக்கி அதற்கு பிறகு அப்படி ஒரு நிகழ்வு இன்றுவரை மீண்டும் நடைபெறாதவாறு அம்மீனவர்களைப் பாதுகாத்தது.

தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்க அப்படி ஒரு நடவடிக்கையை இதுவரை எந்த அரசும் எடுக்காதது ஏன்? தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? தமிழர்கள் இந்த நாட்டின் சட்டத்திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வரி செலுத்தவில்லையா? அல்லது வாக்கு செலுத்தவில்லையா? கடந்த கால துரோக வரலாற்றை இனியும் தொடர்ந்தால் இந்த நாட்டின் மீது என்ன பற்று எங்களுக்கு இருக்கும்?

ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை மீட்க முயற்சி மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story