சென்னையில் ரவுடி மீது துப்பாக்கி சூடு
சென்னையில் ரவுடி அறிவழகனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
சென்னை,
சென்னையில் பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவுடி அறிவழகன். ஏ பிரிவு ரவுடியான அறிவழகன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேடப்படும் குற்றவாளியான அறிவழகன் பல்வேறு இடங்களில் மாமூல் கேட்டு பிரச்சினைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகவும் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் ஓட்டேரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பனந்தோப்பு பகுதியில் அறிவழகன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து உதவி காவல் ஆய்வாளர் பிரேம் குமார் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்ய சென்றனர். போலீசாரைக் கண்டதும் பிரேம் குமார் தன்னிடம் இருந்த ஆயுதங்களால் அவர்களை தாக்கி விட்டு தப்பியோட முயன்றார். இதையடுத்து உதவி ஆய்வாளர் பிரேம் குமார் அறிவழகனை காலில் சுட்டுப் பிடித்தார். தற்போது அறிவழகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.