விருதுநகர் சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், அம்பனேரி கிராமத்தைச் சேர்ந்த திரு.சோணைமுத்து த/பெ.மாசிலாமணி என்பவர் தன்னுடைய மகள்கள் செல்வி.மதுமிதா (வயது 15), செல்வி.சுஷ்மிதா (வயது 13) மற்றும் செல்வி.அஜிதா (வயது 10) ஆகிய நால்வரும் 01.06.2025 அன்று மேலக்கண்டமங்கலம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் திரு.சோணைமுத்து என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செல்வி.மதுமிதா, செல்வி.சுஷ்மிதா மற்றும் செல்வி.அஜிதா ஆகிய மூவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செல்வி.மதுமிதா என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சுஷ்மிதா மற்றும் அஜிதா ஆகிய இருவருக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.என தெரிவிக்கப்பட்டுள்ளது






