திட்டங்களின் நிலை குறித்து கள ஆய்வு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் கருணாநிதி சிலை அமைப்பது மிகவும் பொருத்தமானது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.810 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து நலத்திட்ட விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது நாமக்கல் மாவட்டம். இங்கு விழா நடப்பது சிறப்பானது. ஆட்சியர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக இருப்பவர்தான் நம்முடைய நாமக்கல் ஆட்சியர் உமா. திமுக ஆட்சியில் நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நாமக்கல்லில் கலைஞர் கருணாநிதியின் சிலை அமைவது மிகவும் பொருத்தமானது. சேலம் மாவட்டத்தில் இருந்து 1997ல் நாமக்கல் மாவட்டமாக பிரித்தவர் கருணாநிதி. அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த வகையில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
சேந்தமங்கலத்தில் விளையும் பழம், காய்கறிகளை பதப்படுத்த வேளாண் விற்பனை மையம் தொடங்கப்படும். நைனாமலை வரதராஜபெருமாள் கோவிலுக்கு தார்ச்சாலை அமைத்துத்தரப்படும். 3 ஆண்டு ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களின் நிலை குறித்து கள ஆய்வு செய்ய உள்ளேன். மாவட்ட வாரியாக நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்.
தமிநாட்டின் மதிப்பையும் அதிமுகவின் மதிப்பையும் எடப்பாடி பழனிசாமி அடமானம் வைத்தார். எடப்பாடி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தின் மதிப்பே போயிருந்தது.அரசின் திட்டங்களால் பயன்பெறும் மக்களிடம் திமுகவின் மதிப்பை கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். திமுக ஆட்சியால் பயன்பெறும் பெண்கள், குழந்தைகளுக்கு இந்த ஆட்சியின் பெருமை தெரியும். எதிர்க்கட்சி தலைவர் கூறுவதை மக்கள் காமெடியாக எடுத்துக்கொள்கின்றனர்.
நடந்த அனைத்து தேர்தல்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சித்தலைவர் கனவுலகில் இருக்கிறாரா? எனத்தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
விழா முடிந்ததும் கார் மூலம் திருச்சி செல்லும் அவர், அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் திரும்புகிறார்.