ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் தி.மு.க. வேட்புமனு தாக்கல்
நாளை மறுநாள் தி.மு.க .வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
ஈரோடு,
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். அவரது மறைவுக்குப் பிறகு 2023-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க. கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார். அவரது மறைவால் வரும் பிப்ரவரி 5-ம் தேதி ஈரோடு கிழக்கில் 2-வது முறையாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
2021 முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை ஆளும் தி.மு.க.வே களம் காண்கிறது. அ.தி.மு.க, பா.ஜ.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், தி.மு.க. சார்பில் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் சார்பில் மா.கி. சீதாலட்சுமி போட்டியிடுகிறார்.
இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையை தி.மு.க. நேற்று தொடங்கி உள்ளது. இதன்படி தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் அமைச்சர் முத்துசாமி உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்தனர். இதனைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக தி.மு.க. வினர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. அதில் 4 வார்டுகளில் நாங்கள் வாக்கு கேட்டு முடித்துள்ளோம். அங்கு தி.மு.க.வுக்கு அனைத்து மக்களும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். நாளை மறுநாள் பகல் 12 மணிக்கு தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல் செய்வார்" என்று அவர் கூறினார்.