கல்லூரி வளாகங்களில் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்: யுஜிசி அறிவுறுத்தல்

கல்லூரி வளாகங்களில் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தி உள்ளது.
சென்னை,
பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் மணீஷ் ஆர்.ஜோஷி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பருவ வயது அடைந்த பெண்களின் வாழ்வில், மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு இயற்கையான நிகழ்வாகும். அவர்களுக்கு, மலிவு விலையில் நாப்கின்கள் கிடைப்பதற்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதும் அவசியமாகும். இதன்மூலம், பருவ வயது அடைந்த பெண்கள், சமூகத்திலும், கல்வி மற்றும் பொருளாதாரத்திலும் எந்தவித தடைகளுமின்றி தங்கள் இலக்கை அடைய முடியும்.
பொது இடங்களில் சானிட்டரி நாப்கின் வழங்கும் எந்திரம் மற்றும் பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை எரியூட்டும் எந்திரங்கள் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதன்மூலம், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க முடியும். எனவே, உயர்கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்லூரி வளாகங்களில் சானிட்டரி நாப்கின் மற்றும் அதற்கான சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.