எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கம்: மக்கள் கருத்துகேட்புக் கூட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் - சீமான்
மக்கள் கருத்துகேட்புக் கூட்டத்தில் விதிமீறி செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
20.12.2024 அன்று சட்டத்திற்கு மாறாக நடைபெற்ற எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத்திற்கான மக்கள் கருத்துகேட்புக் கூட்டத்தினைச் செல்லாது என்று அறிவிப்பதோடு, விதிமீறி செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
பெரும் அளவில் மக்கள் இத்திட்டம் குறித்துக் கருத்துத் தெரிவிக்க வருகைத் தரக்கூடும் என்பது தெரிந்தும், குறிப்பாக இத்திட்டத்தினை எதிர்க்கக்கூடிய அமைப்புகள் வெளிப்படையாகக் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பங்குபெறுவது குறித்து முன்னரே அறிவித்தும், போதிய இடவசதியில்லாத வகையில் இதனைத் தொடர நினைத்தது முதல் பிழையாகும். பெருவாரியான மக்கள் அமைதியான முறையில் கருத்தினைப் பதிவு செய்ய முடியாமலேயே முடிவடைந்த கூட்டம் செல்லத்தக்கதல்ல. இத்திட்டம் குறித்துக் கருத்துத் தெரிவிக்க நினைக்கும் எவரும் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்க வழிவகை செய்யும் சூழலியல் விதிமுறைகள் காற்றில் விடப்பட்டு, ஆளுங்கட்சிக் கூட்டம் போல நடத்தப்பட்டது முற்றிலும் விதிகளுக்கு மாறானதாகும்.
கூட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தவேண்டிய மாவட்ட ஆட்சியர் இறுதிவரையில் கூட்டத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசாமலும், பங்கெடுக்காமலும், தனக்கும் கூட்டத்திற்கும் தொடர்பு இல்லாததுபோல அமைதிகாத்ததும், இறுதியாகக் கூட்டம் முழுவதுமாக முடிவு பெறுவதற்கு முன்னரே எழுந்து சென்றதும் தன்னுடைய பொறுப்பினைச் சரிவர செய்யாத விதிமீறலாகும். அதற்கு மாறாக திருவொற்றியூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சங்கர் கூட்டத்தைத் தலைமையேற்று நடத்துவதுபோல அடிக்கடி இடைமறித்துப் பேசியது மட்டுமல்லாமல், கருத்துப் பதிவு செய்ய வந்த நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை திட்ட ஆய்வுக் குழுவின் இணைச்செயலாளரைப் பேச விடாமலும் தடுத்துள்ளார். மேலும் திருவொற்றியூர் பகுதி மக்கள் மட்டும்தான் பேச வேண்டும் என்றும், மற்றவர்கள் பேசக்கூடாது என்றும் மிரட்டல் தொனியில் பேசியுள்ளார். திட்டத்தினை எதிர்த்துப் பேசியவர்களைத் தொடர்ந்து பேச விடாமல் கூச்சலிட்டதும், அவர்களை நோக்கி தகாத சொற்களால் திட்டியதும், மிரட்டியதும் என்று ஒட்டுமொத்த நிகழ்வும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006க்கு மாறாகவும், நீதிமன்றங்கள் வகுத்த விதிகளைப் பின்பற்றாமலும் நடைபெற்றது.
அனைவருக்கும் பாசிசம் குறித்துப் பாடம் எடுக்க நினைக்கும் தி.மு.க. அரசு, மறுபுறம் தன் கட்சி ஆட்களைக் கொண்டே பாசிசப் போக்கினை முன்னின்று நடத்திக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்வை தலைமை தாங்கி விதிமீறல்களைத் தடுத்திருக்க வேண்டிய மாவட்ட ஆட்சியரின் செயல்பாடின்மை கடும் கண்டனத்திற்குரியது. மேலும், இந்நிகழ்வைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாத காவல்துறையினர் மீதும், விதிகளைக் கடந்து செயற்பட்ட திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் சங்கர் மீதும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
மேலும், மேற்கூறிய காரணங்களுக்காகவே பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, அவ்வாறு அறிவிக்காவிட்டால் அதற்கு எதிரான துறைசார், சட்ட முன்னெடுப்புகளையும் நாம் தமிழர் கட்சி மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.