தென்பெண்ணை ஆற்றில் அதிகளவு நீர் திறந்துவிட்டதே வெள்ளத்திற்கு காரணம் - எடப்பாடி பழனிசாமி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் மழை, வெள்ள பாதிப்புகளை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது;
சேலத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. திருமணிமுத்தாறு முழுமையாக தூர்வாரப்படாததால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் சேலம் மாநகரத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வடிகால் பணி முறையாக மேற்கொள்ளாததால் இந்த பிரச்சினை.
சாத்தனூர் அணையில் இருந்து திடீரென ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டுள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், விழுப்புரம், கடலூரில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்போது மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியும். அரசில் அலட்சியத்தால் கரையோர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டனத்திற்குரியது. போர்க்கால அடிப்படையில் வெள்ள நீர் வடிவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்க வேண்டும்."
இவ்வாறு அவர் பேசினார்.