ஈஸ்டர் பண்டிகை: தேவாலயங்களில் குருத்தோலை பவனி

கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியபடி ஓசன்னா என்ற பாடலை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.
சென்னை,
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் 40 நாள் தவக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தவக்காலத்தின் முடிவில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும். தவக்காலத்தின்போது பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன் ஒருபகுதியாக ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தூத்துக்குடியில் உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்திலும் பங்குத்தந்தை ஸ்டார்வின் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதிலும் ஏராளமான இறைமக்கள் குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா பாடலை பாடியபடி பவனியாக சென்றனர். பின்னர், சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஆன்டனி ப்ரூனோ, மறை மாவட்ட செயலர் ஜெகதீசன் ஆகியோர் தலைமையில் குருத்தோலையை மந்திரித்து, ஜெபம் செய்து பின்னர் இறை மக்கள் கையில் பிடித்தவாறு ஓசன்னா பாடலை பாடியபடி பவனியாக ஆலயத்துக்குச் சென்றனர். சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பேராலயத்தில் ஏராளமானோர் திரண்டு வழிபாடு செய்தனர்.
தூத்துக்குடியில் உள்ள சின்னக்கோயில் என அழைக்கப்படும் திரு இருதய ஆலயத்தில் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.