மதுபோதையில் யானை மீது தூங்கிய பாகன் - வழக்குப்பதிவு செய்து வனத்துறை நடவடிக்கை


மதுபோதையில் யானை மீது தூங்கிய பாகன் - வழக்குப்பதிவு செய்து வனத்துறை நடவடிக்கை
x

மதுபோதையில் யானை மீது தூங்கிய பாகன் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான அனுபாமா என்ற பெண் யானை உள்ளது. இந்த யானையை நேற்று காலையில் பாகன் மேய்ச்சலுக்காக கொண்டு சென்றார். பின்னர் மாலையில் பாகன் யானையை திரும்ப திற்பரப்புக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது பாகன் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் திடீரென அண்டுகோடு பகுதியில் வைத்து மதுபோதையில் இருந்த பாகன் யானை மீது படுத்து தூங்கினார். அப்போது பாகனுடைய கையில் இருந்த அங்குசம் கீழே விழுந்தது. அந்த அங்குசத்தை யானை எடுத்து பாகனிடம் கொடுத்தது. பாகன் வாங்காததால் அங்குசம் மீண்டும் கீழே விழுந்தது. இதனால் ஏதோ விபரீதம் என தெரிந்த யானை சாலையின் ஓரமாக ஒதுங்கி அப்படியே நின்றது.

இதுபற்றி தகவலறிந்து யானை உரிமையாளரும், வனத்துறை அலுவலரும் மதுபோதையில் யானையின் மீது படுத்து கிடந்த பாகனை கீழே இறக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவர் இறங்கவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து போதை தெளிந்த பின்னர் பாகனை கீழே இறக்கினார்கள். இதுகுறித்து வனத்துறையினர் யானை உரிமையாளர் மற்றும் பாகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story