1,03,166 வண்டல் சேகரிப்புத் தொட்டிகளில் தூர் வாரும் பணிகள் தீவிரம் - சென்னை மாநகராட்சி

சென்னையில் மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாருதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழையினை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நீர்நிலைகள், கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாருதல் மற்றும் கழிவுகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மழைநீர் வடிகால்வாய்களில் மழைநீர் தடையின்றி செல்வதை உறுதி செய்வதற்கும், சாலைகளில் மிதக்கும் கழிவுகள் வடிகால்வாய்களில் நுழைவதைத் தடுப்பதற்கும், வண்டல் மண் சேகரிக்கவும் மழைநீர் வடிகால்வாய்களில் 5 மீ. இடைவெளியில் 1,03,166 வண்டல் வடிகட்டித் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வண்டல் வடிகட்டித் தொட்டிகளின் மூடி குப்பைகளை தொட்டியில் செல்வதைத் தடுத்து மழைநீர் மட்டும் தொட்டியில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வண்டல் சேகரிப்புத் தொட்டிகளில் வண்டல் மண் சேகரிக்கப்படுகிறது. வண்டல் வடிகட்டித் தொட்டிகளிலிருந்து இரண்டு குழாய்கள் மூலம் மழைநீர் தங்குதடையின்றி மழைநீர் வடிகால்களில் சீராகச் செல்லும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பருவ மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே இந்த வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் வண்டல்கள் மற்றும் குப்பைகள் அகற்றி முதற்கட்டமாக சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளிலும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாரி வண்டல் மண் அகற்றும் பணிகள் மழையினை முன்னிட்டு தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






