'கவலைப்படாதீங்க.. நான் களத்துக்கு வந்துவிட்டேன்' - மாநாட்டில் விஜய் அதிரடி பேச்சு
காமராஜர் வழியில் தமிழக வெற்றிக்கழகம் செயல்படும் என மாநாட்டில் விஜய் பேசினார்.
சென்னை,
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று நடத்தினார். மாநாட்டு மேடைக்கு சரியாக நான்கு மணிக்கு வருகை தந்துள்ளார். மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்களை பார்த்ததும் நெகிழ்ச்சி அடைந்த விஜய் கண்கலங்கினார்.
சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய விஜய், மாநாட்டில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை ரிமோட் மூலம் ஏற்றினார். தனது பெற்றோரை ஆரத்தழுவி ஆசி பெற்ற பின்பு மாநாட்டில் விஜய் பேசியதாவது;
யார் கீழே, யார் மேலே என்று நாம் பார்க்க போவதில்லை. நாம் எல்லாம் ஒன்றுதான். எல்லோரும் சமம்தான். இந்த மேடையில் கோபமாக கொந்தளித்தால் பேசப்படுவோம் என்ற விஷயம் முன்பு இருந்தது, அது நமக்கு சரிப்பட்டு வராது. கோபமாக கொந்தளிப்பதை விட்டு விட்டு சொல்ல வந்ததை சொல்லி விட வேண்டும். அறிவியல் தொழில் நுட்பம்தான் மாற வேண்டுமா?, அரசியல் மாறக்கூடாதா?, மாறணும். இல்லையென்றால் இந்த புதிய உலகம், புதிய அலை மாற்றி விடும். மாறாதது மனித பிறப்பு, பசி, வேலை, உழைப்பு, பணம் மட்டும் தான்.
திராவிடமும், தமிழ் தேசியமும் எங்களது இரு கண்கள். தகுதி இருந்தும் நீட் தேர்வு தடையாக உள்ளது. எனது சகோதரி வித்யாவை இழந்த போது ஏற்பட்ட அதே வலியை சகோதரி அனிதாவை உயிரிழந்த போதும் நான் பெற்றேன். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோள். நான் கூத்தாடி தான். அரசியலுக்கு எம்ஜிஆர், என்டிஆர் வந்த போதும் கூத்தாடிகள் என்று தான சொன்னார்கள். கூத்து என்பது இந்த மண்ணோடும் மக்களுடன் கலந்து. நான் உங்களில் ஒருவன். இனிமேல் கவலைப்படாதீங்க. உங்கள் விஜய் களத்துக்கு வந்துட்டான். நான் களத்துக்கு வந்துவிட்டேன்.
பெரியாரை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அவரது கொள்கையான கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடில்லை. பெரியாரின் கொள்கைகளான பகுத்தறிவு, சமூக நீதி கொள்கைகளை முன்னெடுப்போம். வெறுப்பு அரசியலை கையில் எடுக்கப்போவதில்லை. பச்சை தமிழர் காமராஜர் வழியில் தமிழக வெற்றிக்கழகம் செயல்படும்.
ஊழலில் மலிந்து முகமூடியை அணிந்து கொண்டு நம்மை ஆள்பவர்களே நமது எதிரி மதவெறி பிடித்தவர்களும் ஊழல்வாதிகளும் நமது எதிரிகள். என் மீது அவதூறு பரப்பினால் நான் பயப்படமாட்டேன். என்னை வீழ்த்த முடியாது.
மக்கள் விரோத ஆட்சியை நடத்தி விட்டு திராவிட மாடல் என ஏமாற்றுகிறார்கள். அவங்கள் பாசிச ஆட்சி என்றால், நீங்கள் பாயச ஆட்சியா? பெரியார், அண்ணா பெயரை சொல்லி, திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப ஆட்சியை நடத்துகிறார்கள். அவர்களும் நம்முடைய கொள்கை எதிரி தான். வீடு, உணவு, வேலை இவை மூன்றுமே அடிப்படை தேவை. இதை கொடுக்க முடியாத அரசு, இருந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன?
2026ல் தனிப்பெரும்பான்மையுடன் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் எனக்கூறிய விஜய் நம்முடன் வர நினைப்பவர்களுடன் இணைந்து பணியாற்றவும் தயார். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும். 2026-ம் ஆண்டு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு. உறுதியுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்."
இவ்வாறு அவர் பேசினார்.