பதட்டம் வேண்டாம்... தெளிவாக எழுதுங்கள்: மாணவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.
சென்னை,
12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பள்ளி மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுத இருக்கின்றனர். இந்த தேர்வை மாணவ-மாணவிகள் எழுதுவதற்கு ஏதுவாக 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
"தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கேட்கப்படும் கேள்விகளுக்கு தெளிவாக பதில்களை எழுதுங்கள். எவ்வித பதட்டமும் வேண்டாம். படிக்கிற ஆர்வத்துடன் உங்கள் உடல்நலன் மீதும் கவனம் செலுத்துங்கள். தேர்வு காலம் முழுமையும் புத்துணர்ச்சியோடு நீங்கள் இருப்பது மிக முக்கியம். தேர்வில் நீங்கள் அனைவரும் வெற்றி பெறவும், சாதனை புரியவும் என் அன்பும், வாழ்த்தும்" என்று தெரிவித்துள்ளார்.