திருமாவளவனுக்கு தி.மு.க. எந்த அழுத்தமும் தரவில்லை - அமைச்சர் எ.வ.வேலு


திருமாவளவனுக்கு தி.மு.க. எந்த அழுத்தமும் தரவில்லை - அமைச்சர் எ.வ.வேலு
x

கோப்புப்படம் 

திருமாவளவன் அரசியலில் நல்ல தொலைநோக்குப் பார்வை உள்ளவர் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

மதுரை,

மதுரை கோரிப்பாளையம், மேலமடை சந்திப்பில் நடைபெறும் மேம்பால கட்டுமானப் பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நூலகப் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

மதுரை கோரிப்பாளையம் மேம்பாலப் பணி 25 சதவீதமும், மேலமடை சந்திப்பு மேம்பாலப் பணி 32 சதவீதமும் முடிவடைந்துள்ளன. இரண்டு பாலங்களையும் 2025-ம் ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொண்ட நூல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்கக் கூடாது என்று தி.மு.க. எந்த அழுத்தமும் தரவில்லை. அழுத்தம் தரவேண்டிய அவசியமும் இல்லை. திருமாவளவன் நல்ல அறிவாளி; அரசியலில் நல்ல தொலைநோக்குப் பார்வை உள்ளவர். அரசியலைப் பற்றி நன்கு புரிந்து கொண்டவர். யாரும் அழுத்தம் கொடுப்பதை திருமாவளவன் ஏற்க மாட்டார்.

தமிழகத்தில் சாலைகளில் ஏற்படும் சேதங்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக 'நம்ம சாலை' என்ற செயலி உள்ளது. இதில் தெரிவிக்கப்படும் புகார்கள் மீது 48 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story