திமுக அரசு சமூக நீதியை காலில் போட்டு மிதிக்கிறது: டாக்டர் கிருஷ்ணசாமி

தற்போது அமைச்சர்கள் பாளையத்துகாரர்களாக செயல்பட்டு வருகின்றனர் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
வத்தலக்குண்டு,
வத்தலக்குண்டுவில், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சமூக நீதி ஆட்சி நடைபெற்று வருகிறது என்று நாளுக்கு நாள் பெருமை பேசிக்கொள்ளும் திமுக அரசு, சமூக நீதியை காலில் போட்டு மிதிக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாநாடு நடத்தப்படுகிறது. இதனால் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்து கோடிட்டு காட்டப்படும். நாங்கள் எந்த கட்சியுடனும் நெருங்கியும் இல்லை, தூரத்திலும் இல்லை.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது என்ற கொள்கையில் தான் கட்சிகள் உள்ளது. இதனால் தான் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்றால் தான் சாதிய, மத, இன பாகுபாடு இல்லாமல் பணிபுரியமுடியும். விஜயநகர பேரரசு வந்த பிறகு பாளையங்கள் உருவாக்கப்பட்டது போல், தற்போது அமைச்சர்கள் பாளையத்துகாரர்களாக செயல்பட்டு வருகின்றனர். மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஆட்சி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






